tamilnadu

img

வெல்லிங்டன் டெஸ்ட்... தோல்வியின் விளிம்பில் இந்திய அணி 

ஆக்லாந்து 
நியூஸிலாந்து நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் நியூஸிலாந்து நாட்டின் முக்கிய நகரான வெல்லிங்டனில் நடைபெற்று வருகிறது.  

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மிடில் ஆர்டர் வீரர்களின் சொதப்பலான ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 68.1 ஓவர்களில் 165 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் தனது இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து அணி கேப்டன் வில்லியம்சனின் (89) அசத்தலான ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 100.2 ஓவர்களில் 348 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.     

183 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய கிரிக்கெட் அணி தொடக்கத்திலேயே பிரித்வியை (14) இழந்தது. அதிகம் எதிர்பார்த்த புஜாரா (11), கேப்டன் கோலி (19) ஆகியோர் விரைவாக பெவிலியன் திரும்ப வழக்கம் போல மயாங்க் அகர்வால் - ரஹானே ஜோடி விக்கெட் சரிவிலிருந்து இந்திய அணியை மீட்கும் முயற்சியில் களமிறங்கியது.  

அசத்தலாக விளையாடி அரைசதமடித்த  மயாங்க் அகர்வால் (58) சவுத்தி பந்தில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய விஹாரி ரன் சேர்ப்பதை விட்டுவிட்டு தடுப்பாட்டத்தில் அசத்தினார். 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 65 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து 39 ரன்கள் பின்தங்கியுள்ளது. ரஹானே (25), விஹாரி (15) ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் இந்திய அணி டிரா செய்வது மிகவும் சிரமமான விஷயம் ஆகும். தொடர்ந்து திங்களன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு தொடங்கும். ஸ்டார் சேனலில் போட்டியை ரசிக்கலாம்.  

;